`சிறந்த பொய் செய்திகள்`: விருதுகளை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Jan 18, 18

தன்னைப் பற்றி சிறந்த பொய் செய்திகளை அளித்து வரும் பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் விருதினை அறிவித்தார் டிரம்ப்.

சிறந்த பொய் செய்திகளுக்கான விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருக்கிறார்.

தன்னைப் பற்றி சிறந்த பொய் செய்திகளை அளித்து வரும் பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் விருதினை அறிவிக்கப்போகிறேன் என்று சில நாட்களுக்கு முன் டிரம்ப் கூறி இருந்தார். இன்று அதனை அறிவித்தார் டிரம்ப்.

இந்த `விருது அறிவிப்பானது` ஒரு பட்டியலாக வெளியாகி இருக்கிறது. செய்தி நிறுவனங்கள் டிரம்ப் மற்றும் டிரம்ப் நிர்வாகம் குறித்து அளித்த செய்திகளும், பின்னர் அந்த நிறுவனங்கள், அந்த செய்திகள் தவறானவை என்று வெளியிட்ட மறுப்பு தகவல்களும் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

அந்த விருது பட்டியலில், அதிக முறை போலி செய்திகளை வெளியிட்டதாக சி.என்.என் செய்தி நிறுவனம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனத்தின் பெயர் மட்டும் நான்கு முறை இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் இதழின் பெயர் இரண்டு முறையும், ஏ.பி.சி நிறுவனத்தின் பெயரும், டைம் மற்றும் நியூஸ்வீக் இதழ்களின் பெயரும் தலா ஒரு முறை இந்த விருது பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அந்த பட்டியலில் உள்ள தகவல்களை இங்கே தொகுத்துள்ளோம்.

விருது விவரம் - `ஏன்... எதற்கு?`

நியூயார்க் டைம்ஸ் - அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிப் பெற்ற அன்று நியூயார்க் டைம்ஸ் இதழைச் சேர்ந்த பவுல் குருக்மேன், அமெரிக்க பொருளாதாரம் இனி மீளவே வாய்ப்பில்லை என்று கூறி இருந்தார். ஆனால், டிரம்ப் அமெரிக்க பொருளாதாரம் எழுச்சி அடைவதாக சொல்கிறார். அது போல, ஏ.பி.சி செய்திநிறுவனத்தைச் சேர்ந்த பிரைய்ன் ரோஸ், அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதாக எழுதி இருந்தார். இது பொய் தகவல் என்கிறார் டிரம்ப்.

சி.என்.என் நிறுவனம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், டொனால்ட் ஜூனியர் டிரம்ப்பும், மக்கள் பார்வையில் விக்கிலீக்ஸ் ஆவணங்களை வைப்பதற்கு முன்பே, கள்ளத்தனமாக அந்த ஆவணங்களை பார்த்தார்கள் என்று செய்தி வெளியிட்டு இருந்தது. அதாவது செப்டம்ப்ர் 4, 2016 ஆம் தேதி அவர்களுக்கு அந்த ஆவணங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது என்று எழுதி இருந்தது. பின்னர், ஆவணங்கள் பொது மக்கள் பார்வைக்கு அனுப்பப்பட்ட பின்னரே, அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்று திருத்தி செய்தி வெளியிட்டது.

டைம் இதழ், டிரம்ப் ஓவல் அலுவலகத்திலிருந்து மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படத்தை நீக்கியதாக டைம் இதழின் வெள்ளை மாளிகை செய்தியாளர் ஜீக் மில்லர் கூறினார். பின்னர் அவரே அந்த செய்தியை திருத்திக் கொண்டார்.

வாஷிங்கடன் போஸ்ட்செய்தியாளர் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த டிரம்ப் கூட்டத்திற்கு கூட்டமே வரவில்லை என்று ஒரு புகைப்படத்தை ட்வீட்டரில் பகிர்ந்தார். ஆனால், அந்த புகைப்படம் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே எடுக்கப்பட்டது. பின்னர், அந்த செய்தியாளர் இதற்காக மன்னிப்பு கேட்டார். அவர், "இது வாஷிங்டன் போஸ்ட் ட்விட்டர் கணக்கிலிருந்து பகிரப்பட்டது அல்ல. என் சொந்த ட்விட்டர் கணக்கிலிருந்து பகிரப்பட்டது"என்றார்.

போலீஷ் அதிபரின் மனைவி டிரம்பிற்கு கை குலுக்கவில்லை என்று செய்தி வெளியிட்டது நியூஸ் வீக். ஆனால் அவர், டிரம்பின் மனைவி மெலனியாவிடம் கை குலுக்கியப் பின் அவர் டிரம்ப்பிற்கு கை கொடுத்தார்.

ஜப்பான் சுற்று பயணத்தின் போது, டிரம்ப் மீன்களுக்கு உணவளிப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது சி.என்.என் நிறுவனம். இந்த வீடியோவை பொய்யாக தொகுக்கப்பட்டது என்கிறது டிரம்ப்பின் அறிக்கை. டிரம்ப் மீன்களுக்கு சரியாக உணவளித்தார். ஆனால், சி.என்.என் மற்றும் பிற நிறுவனங்கள் இந்த செய்தியை அளிப்பதில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டன என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டதை இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சி.என்.என் நிறுவனம் டொனால்ட் - ரஷ்யா தொடர்பு குறித்து செய்தி வெளியிட்டதையும், பின் இந்த செய்தி ஆதாரமற்றது என்பதால் மூன்று சி.என்.என் பத்திரிகையாளர்கள் பதவி விலகியதையும் குறிப்பிட்டுள்ளது இந்த பட்டியல்

பருவநிலை மாற்றம் தொடர்பான ஒரு அறிக்கையை டிரம்ப் நிர்வாகம் மறைத்துவிட்டதாக செய்தி வெளியிட்டது தி நியூயார்க் டைம்ஸ். ஆனால், இந்த செய்தியில் திருத்தம் செய்து வெளியிட்டது டைம்ஸ் நாளிதழ்.

இறுதியாக. அனைவராலும் விவாதிக்கப்பட்டு வரும் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யாவின் பங்கு எனும் `ரஷ்ய கூட்டுச்சதி` பற்றியும் இந்த பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய கூட்டுச்சதி என்பது அமெரிக்க மக்களிடம் கட்டவிழ்த்துவிடப்பட்ட பெரிய பொய். எந்தக் கூட்டுச் சதியும் இல்லை. நான்கு விசாரணை குழுக்கள் இது குறித்து விசாரித்து வருகிறது எனகிறது இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரு செய்தி.