ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை.!!!

Feb 02, 18

மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மன அழுத்தத்தின் காரணமாக ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை

கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனானபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68.

வியாழக்கிழமையன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான இவர், "ஃபிடலிட்டோ" என்று பரவலாக அறியப்பட்டார்.

ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அணுக்கரு இயற்பியலாளர் ஆவார்.

"பல மாதங்களாக மருத்துவ குழுவினர், காஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட்கு ஆழ்ந்த மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளித்து வந்த நிலையில், இன்று காலையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்" என்று கியூபாவின் அதிகாரபூர்வ செய்தித்தாளான ’கிரான்மா’ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அவர் சமீபத்திய மாதங்களில் புறநோயாளியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்று வந்ததாக அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மரணிப்பதற்கு முன்னதாக, அவர் கியூப அரசின் அறிவியல் ஆலோசகராகவும் மற்றும் கியூபாவின் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.

காஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட் அவரது தந்தையின் முதல் மனைவியான மிர்தா டயஸ்-பாலார்ட்டுக்கு மகனாக பிறந்தவர்.

இறுதி சடங்குகள் குறித்து அவரது குடும்பம் முடிவெடுக்கும் என்று அரச தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

புரட்சியாளரும் மற்றும் உலகிலேயே அதிக காலம் அரசியல் தொண்டாற்றியவருமான இவரது தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த 2016ம் ஆண்டு தனது 90வது வயதில் உயிரிழந்தார்.