ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா வெற்றி!

Oct 10, 17

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஞ்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்கள் விளையாடி கொண்டிருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அப்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால்,  ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டு, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு, 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அடுத்து, கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார்.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 5 புள்ளி 3 ஓவர்களில், 49 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.