உலக கோப்பை அரையிறுதி: பாக்.கை வீழ்த்திய இந்தியா!!

Jan 30, 18

203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாக்.,கை வீழ்த்தியது இந்தியா

கிறைஸ்ட் சர்ச்: ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், பாகிஸ்தானை சுருட்டிய இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 19வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. பிருத்வி ஷா தலைமையிலான இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது.

இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், பரம எதிரி பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுபம் கில், 102 ரன்கள் விளாசி நாட்அவுட்டாக களத்தில் நின்றார். மன்ஜோத் கல்ரா 47, பிருத்வி ஷா 41 ரன்கள் விளாசினர்.

இதையடுத்து, 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது பாகிஸ்தான். இந்திய அணியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான் அணி, 69 ரன்களுக்கே ஆல்அவுட்டானது. 29.3 ஓவர்கள்தான் அந்த அணியால் தாக்குப்பிடிக்க முடிந்தது. எனவே 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ரஹெய்ல் நாசிர் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் இஷான் போரெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிவ சிங், ரியான் பரக் தலா 2 விக்கெட்டுகளையும், அனுகுல் சுதாகர் ராய் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து சனிக்கிழமை நடைபெற உள்ள பைனல் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.