கள்ளக்காதல்: லாரி டிரைவர் கொலை

Jan 18, 18

கள்ளத் தொடர்பிற்கு இடையூறாக இருந்ததால் மது வாங்கி கொடுத்து, அரிவாளால் அவரது கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

லாரி டிரைவர் கொலை

தா.பேட்டை: திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா மாதுளம்புதூரைச் சேர்ந்தவர் குமரவேல்(35). லாரி டிரைவர். இவரது மனைவி அமுதா(25). 2 மகன்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் பூனாம்பட்டியில் வசித்து வந்தனர். பொங்கலுக்காக குமரவேல் குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த கண்ணனூர் குரும்பபட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்தார். கடந்த 14ம் தேதி இரவு அருகில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள குப்பைக் கிடங்கு அருகே குமரவேல் கொல்லப்பட்டு கிடந்தார். அவரது செல்போனும் மாயமாகியிருந்தது. குமரவேல் செல்போனுக்கு வந்த எண்களை வாங்கி போலீசார் விசாரித்தனர். இதன் அடிப்படையில் மனைவி அமுதா, குமரவேலின் உறவினர் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த கண்ணன்(27) ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.

கண்ணனின் செல்போனை வாங்கி சோதித்தபோது, எவ்விதத் தகவலும் இல்லை. சிம்கார்டில் அழிக்கப்பட்ட தகவல்களை ரெக்கவரி செய்து பார்த்தபோது அமுதா கண்ணனுக்கு சாதம் ஊட்டிவிடுவது, முத்தமிடுவது உள்ளிட்ட அந்தரங்க காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு கிடைத்தது. கண்ணன், அமுதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், ‘திருமணத்திற்கு முன்பே அமுதாவிற்கும், கண்ணனுக்கும் பழக்கம் இருந்தது. அமுதா குமரவேலுவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்னரும் கண்ணனுடன் இருந்த பழக்கம் அமுதாவிற்கு தொடர்ந்தது. கள்ளத் தொடர்பிற்கு குமரவேல் இடையூறாக இருந்ததால் குமரவேலுவை தீர்த்துக்கட்ட அமுதாவும், கண்ணனும் முடிவு செய்தனர்.

பொங்கல் அன்று இரவு குமரவேலுவை அய்யம்பாளையம் அருகே இருட்டான பகுதிக்கு கண்ணன் அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். குமரவேலுக்கு போதை ஏறியவுடன் கண்ணன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரது கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அதே இடத்தில் குமரவேல் துடிதுடித்து இறந்தார்’ என்பது தெரியவந்தது. துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், அமுதாவும், கண்ணனும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.