சினிமா டிக்கெட் கட்டணம் மீதான கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு!

Oct 14, 17

சினிமா டிக்கெட் கட்டணம் மீதான கேளிக்கை வரி, 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் பழனிசாமியை சந்தித்த பின்னர், நடிகர் விஷால் கூறியுள்ளார்.

கேளிக்கை வரியை குறைப்பு தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால், தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது 10 சதவீதமாக உள்ள கேளிக்கை வரி, 8 சதவீதமாக குறைக்க அரசுத் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், சினிமா டிக்கெட் கட்டணம் மீதான கேளிக்கை வரி, 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், அரசு நிர்ணயித்த கட்டணம் தந்தால் போதும் என்றும், தின்பண்டங்களின் விலை எம்.ஆர்.பி. (MRP) விலைக்கே விற்க வேண்டும் என்றும், கூடுதல் விலைக்கு விற்றால் புகார் தரலாம் என்றும் விஷால் தெரிவித்தார். 

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், தியேட்டர்களில் எம்ஆர்பி விலையில் மட்டுமே தின்பண்டங்கள் விற்கப்படுவதாகவும், கூடுதல் விலைக்கு யாரும் விற்பதில்லை, என்றும் தெரிவித்தார்.