நிதி திரட்ட மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த நடிகர் சங்கம் முடிவு

Oct 10, 17

வரும் ஜனவரி மாதம் மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்தப்படும் என்றும், அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழுக் கூட்டம், சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழம்பெரும் நடிகைகள், காஞ்சனா, ஷீலா, வைஜெயந்தி மாலா ஆகிய மூவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் மூத்த பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது, கேளிக்கை வரியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று, நடிகர் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். மேலும், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், மலேசியாவில் நட்சத்திரக் கிரிக்கெட்டோ அல்லது கலைநிகழ்ச்சியோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விஷால் கூறினார்.