பணம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்கள் நான்குபேர் மீது வழக்குப்பதிவு!

Nov 09, 17

பெரியகுளத்தில் போலி அழைப்பிதழ் அச்சடித்து பணம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்கள் நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர்  நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக, போலி அழைப்பிதழ் அச்சடித்து, அரசு  அலுவலகங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோரிடம் ஒரு கும்பல் பணமோசடி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக பிரமுகர் ராஜாமுகமது என்பவர் பெரியகுளம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த மோசடி புகார் தொடர்பாக குருசீனிவாசன், சாதிக்பாட்ஷா, செல்வராஜ், ஜான் மணி  ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் குருசீனிவாசனை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மூவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் அப்பகுதியில் பத்திரிகையாளர்கள் எனக்கூறி  பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.