பத்மாவதி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

Nov 20, 17

பத்மாவதி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வியாகாம் 18 இதனைத் தெரிவித்துள்ளது.

தாமாக முன்வந்து வெளியீட்டுத் தேதியை ஒத்திவைத்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. முன்னதாக இத்திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இத்திரைப்படத்திற்கு சென்சார் போர்டின் அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவில் குறைபாடு உள்ளதாகக் கூறி, மனுவை சென்சார் போர்டு திருப்பி அனுப்பியது.

இதனிடையே, இத்திரைப்படத்தை மறு ஆய்வு செய்து அதன் பிறகே அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே கடிதம் எழுதியுள்ளார். ராஜபுத்ர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை, அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்திரைப்படத்தில் ராணி பத்மாவதியின் வாழ்க்கை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.