வெளிநாட்டு மண்ணில் மீண்டும் தொடரை இழந்தது இந்தியா

Jan 18, 18

தென் ஆஃப்ரிக்க அணிக்கு எதிராக செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 2-0 என்று டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 13-ஆம் தேதியன்று தொடங்கியது.

தனது முதல் இன்னிங்ஸில் தென் ஆஃப்ரிக்க அணி 335 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி, 307 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய இந்திய அணித்தலைவர் விராட் கோலி 153 ரன்களை எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த தென் ஆஃப்ரிக்க அணி 258 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

தொடக்கம் முதலே தடுமாறிய இந்திய அணி

இதன் மூலம் இந்திய அணிக்கு 287 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆஃப்ரிக்கா நிர்ணயித்தது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 35 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. முரளி விஜய், ராகுல் மற்றும் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தனது 2-ஆவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி புஜாராவின் விக்கெட்டை தொடக்கத்திலேயே பறிகொடுத்தது.

இந்த போட்டியில் இரண்டாவது முறையாக புஜாரா ரன் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் நீண்ட நேரம் நிலைத்து விளையாடவில்லை.

இரண்டாவது இன்னிங்ஸில் போராடி விளையாடிய ரோகித் சர்மா 47 ரன்களில் வெளியேற, தென் ஆஃ ப்ரிக்க அணியின் வெற்றி உறுதியானது. 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இந்திய அணி இழந்தது. இதன் மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் தோல்வியடைந்தது.

தென் ஆப்ரிக்க அணி சார்பில் அறிமுக வீரர் நிகிதி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முன்னதாக, கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆஃப்ரிக்கா வென்றது.

இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என தென் ஆஃப்ரிக்கா கைப்பற்றியது.