​குற்றப் பின்னணி கொண்டவர்களை எளிதில் கண்டுபிடிக்க புதிய மொபைல் செயலி அறிமுகம்!

Nov 20, 17

குற்றப் பின்னணி கொண்டவர்களின் தகவல்களுடன் இயங்கும் புதிய செயலியை சென்னை மாநகர காவல்துறை சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலிக்கு Face Tagger என பெயரிடப்பட்டுள்ளது

சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றச் செயல்களை 
கட்டுப்படுத்தவும் போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். 
சமீபத்தில் Face Detection என்ற மென்பொருளை பயன்படுத்தி அதிநவீன சிசிடிவி கேமிராக்களை நகரின் பல பகுதிகளில் பொருத்தினர். இதன் மூலம் குற்றவாளிகளின் முகத்தை துல்லியமாக கண்டறிந்து குற்ற சம்பவங்களை விரைந்து கண்டுபிடிக்க முடிந்தது. 

இதைப் போலவே சந்தேகப்படும் நபர்கள் மீது ஏதாவது குற்ற வழக்குகள் உள்ளனவா என்பதை கண்டறிய FACE TAGGER என்னும் மொபைல் செயலியை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சோதனை முறையில் தி. நகர் காவல் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல் செயலியின் மூலம் சந்தேகப்படும் நபர்களின் படத்தை ஸ்கேன் செய்தால் அவர் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள முடியும் எனக் கூறுகிறார் தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன். FACE TAGGER செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித் திரிந்த குற்றவாளிகள் சிலரை பழைய வழக்குகளின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

FACE TAGGER செயலியில் தற்போது, கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற குற்ற வழக்குகள் தொடர்பான தகவல் மட்டுமே இருந்தாலும், இனி வரும் நாட்களில் அதனை அதிகரித்து செயலியை மேம்படுத்தவும் சென்னை காவல்துறை திட்டமிட்டு வருகிறது. தி.நகர் காவல் மாவட்டத்திலுள்ள 11 காவல்நிலையங்களில் பணிபுரியும் 500 காவலர்களுக்கு FACE TAGGER செயலி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை ஒரு சில நொடிகளில் கண்டுபிடிக்க உதவும் இந்த செயலியை விரைவில் தமிழகம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.