​பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 வீதம் குறைப்பு!

Oct 04, 17

பெட்ரோல், டீசல் மீதான அடிப்படை கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிகழும் மாற்றங்களின் அடிப்படையில் பெட்ரோல்-டீசல் விலை, கடந்த ஜூன் மாதம் முதல், நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. 

இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகு, இதுவரை பெட்ரோல்-டீசல் விலை சுமார் 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி, பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கப்பட்டு வந்தது. 

இதனிடையே, நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயத்தை கைவிட வேண்டுமென, நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்தன. 
இந்நிலையில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைக்கும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.