​ 75 ஆயிரம் மக்களை இடம்பெயர வைத்த பாலி தீவு எரிமலை!

Sep 27, 17

இந்தோனேஷியாவில் உள்ள 'Mount Agung' எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்பதால், அதைச் சுற்றியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேஷியாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் பாலி தீவில், 'Mount Agung' என்ற எரிமலை உள்ளது. 
இந்த எரிமலையிலிருந்து தற்போது புகை வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனால், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அந்த எரிமலையை சுற்றி சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 75 ஆயிரம் மக்கள், வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

அவர்கள் அனைவரும் 300 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பாலி மக்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கிய முக்கிய கோவில்களும் மூடப்பட்டுள்ளன. 

எரிமலை வெடித்தால், அதை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.