​WWE மல்யுத்தத்தில் களம் காணும் முதல் இந்திய வீராங்கனை!

Oct 16, 17

World Wrestling Entertainment (WWE) என்றழைக்கப்படும் உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனம் சார்பாக நடைபெறும் மல்யுத்த போட்டிகளை நாம் சிறு வயதே முதலே பார்த்து வந்திருப்போம்.

அண்டர் டேக்கர், ஹல்க் ஹோகன், கேன், ஆண்ட்ரே-தி-ஜெயண்ட், டிரிபிள்-ஹச் போன்ற பிரபலங்கள் இந்த விளையாட்டை உலகப் புகழடையச் செய்தனர்.

குழந்தைகள் முதல் பதின் வயதினர் வரையிலானவர்களை தொலைக்காட்சிப் பெட்டி முன்பு ஈர்த்த பெருமை இந்த மல்யுத்த போட்டிகளையே சாரும்.

தற்போது WWE நிறுவனம் பெண்கள் பிரிவு போட்டிகளுக்காக இந்தியாவைச் சேர்ந்த கவிதா தேவியை ஒப்பந்தம் செய்துள்ளது. இத்தகவலை WWE சாம்பியனான இந்திய வீரர் ஜிந்தர் மஹால் தெரிவித்தார். 

முன்னதாக தி கிரேட் காளி, ஜிந்தர் மஹால் ஆகிய இந்திய ஆண் வீரர்களை WWE நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்யும் முதல் இந்தியப் பெண்ணாக கவிதா தேவி ஆகியுள்ளார்.

தங்கம் வென்ற கவிதா:

ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி 2016-ல் நடந்த தெற்காசிய போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது WWE மல்யுத்த ரிங்கில் களம் காணும் கவிதா தேவி இதற்கான பயிற்சியை கிரேட் காளியிடம் பெற்று வருகிறார்.

விரைவில்  WWE போட்டிகளில் கவிதா தேவியை இந்திய ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

இவரை பற்றி ஒரு கொசுறுத்தகவல்:

சிறிது நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அதில் இந்தியாவில் நடைபெறும் WWE பெண்கள் போட்டி ஒன்றில் பங்கேற்ற வீராங்கனை ஒருவர், தான் வெற்றி பெற்ற பின்னர், என்னை வீழ்த்த இந்திய மண்ணில் எந்தப் பெண்ணும் இல்லையா என சவால் விடுவார்.

அப்போது பார்வையாளராக இருந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த ஒரு பெண் ஒருவர் திடீரென களத்தில் இறங்கி அந்த வீராங்கனையை தலை மீது தூக்கி வீழ்த்துவார்.

அந்தப் பெண் வேறுயாருமல்ல சாட்சாத் கவிதா தேவியே தான்.