சிறந்த நகரங்கள் வரிசையில் இந்தியாவில் எந்த ஊரும் இல்லை.. எந்த நகரம் டாப் தெரியுமா?

Mar 15, 17

உலக அளவில் சிறந்த நகரமாக ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது

வியன்னா : உலக அளவில் சிறந்த நகரமாக ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாழ்வதற்கு மோசமான நகரமாக ஈராக்கில் உள்ள பாக்தாத் தேர்வாகியுள்ளது.

மெர்சர்ஸ் லிஸ்ட் ஆஃப் சிட்டிஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அதன் பட்டியலை வெளியிடும்.

 ஒரு நகரத்தின் மருத்துவ வசதி, கல்வி, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து வசதி, அரசியில் சூழ்நிலைகள் ஆகிய அனைத்தையும் வைத்து இந்த ஆய்வுகள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் அந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. மொத்தம் 231 நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதில் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா, சிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டு முதல் இடத்தில் உள்ளது. அதன்பின் சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்து டாப் 5 இடங்களில் உள்ளன.

கலாச்சாரம், அருங்காட்சியகம், தியேட்டர்கள், கட்டிடக்கலை, போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்திலும் மற்ற நாடுகளை விட வியன்னாவில் சிறப்பாக இருக்கிறது. இதுவே வியன்னாவை சிறந்த நகரமாக தேர்ந்தெடுக்க காரணம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து வாழ்வதற்கு மோசமான சூழல் உள்ளதால் கடைசி நகரமாக ஈராக்கில் உள்ள பாக்தாத் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டன், பாரிஸ், டோக்கியோ, நியூயார்க் நகரங்கள் முதல் 30 இடங்களுக்குள் கூட வரவில்லை.

ஆசியாவின் சிறந்த நகரமாக சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் உலகளவில் 25 வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் சர்வதேச அளவில் 29 வது இடத்தை பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரம் 87வது இடத்தில் உள்ளது. சிறந்த நகரங்கள் வரிசையில் இந்தியாவில் உள்ள நகரங்கள் எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.