ஐ.டி. ஊழியர்களும் தொழிற்சங்கம் தொடங்கலாம்: தமிழக அரசு அனுமதி

Jun 09, 16

சென்னை: ஐ.டி ஊழியர்களும் சங்கம் ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஐ.டி., நிறுவனங்களின் தொழிற்சங்கங்களுக்கும் முறைப்படி அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் சுமார் நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் ஐ.டி நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு தற்போது வரை தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க தொழிலாளர் சங்கங்கள் இல்லை.

ஐ.டி நிறுவனங்கள் இதற்கு அனுமதிப்பதும் இல்லை. இதனால் தீடீர் ஆட்குறைப்பு, வேலை இழப்பு போன்ற காரணங்களுக்காக ஐ.டி ஊழியர்கள் போராட முடியாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முண்ணனி என்ற அமைப்பின் ஐ.டி தொழிலாளர் பிரிவு ,கடந்த வருடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தற்போது பதிலளித்துள்ள தமிழக அரசு, ஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ள எந்தவித தடையும் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த சேவை நிறுவனங்களுக்கு எல்லா தொழிலாளர் சட்டங்களும் பொருந்தும் எனவும் தொழிலாளர் சட்டப்படி ஐ.டி ஊழியர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது.