கோபா அமெரிக்கா கால்பந்து: மெக்சிகோவை ஊதித்தள்ளியது சிலி

Jun 20, 16

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் கால்இறுதியில் சிலி அணி 7-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை ஊதித்தள்ளியது.

45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி முதல் முறையாக அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று காலை பாக்ஸ்போரப் நகரில் நடந்த கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும், வெனிசுலாவும் மல்லுகட்டின. அர்ஜென்டினா வீரர்களின் தாக்குதல் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வெனிசுலா அணியினர் தடுமாறினர்.

பந்தை கட்டுப்பாட்டில் (61 சதவீதம்) வைத்திருப்பதிலும், அதை கடத்தி கொடுப்பதிலும் அர்ஜென்டினா வீரர்களின் கை ஆரம்பத்தில் இருந்தே ஓங்கியது. 8-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கோல் கணக்கை தொடங்கிய கோன்சலோ குவைன் 28-வது நிமிடத்தில் இன்னொரு கோலும் திணித்தார். கேப்டன் லயோனல் மெஸ்சி 60-வது நிமிடத்தில் கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார். மெஸ்சிக்கு நடப்பு தொடரில் இது 4-வது கோலாகும்.

தனிப்பட்ட முறையில் 28 வயதான மெஸ்சி புதிய மைல்கல்லை எட்டினார். அர்ஜென்டினா அணிக்காக அவர் பதிவு செய்த 54-வது (111 ஆட்டம்) சர்வதேச கோல் இதுவாகும். இதன் மூலம் அர்ஜென்டினா அணியில் அதிக கோல்கள் அடித்தவரான கேப்ரியல் பாடிஸ்டுடாவின் (78 ஆட்டத்தில் 54 கோல்) சாதனையை சமன் செய்தார்.

மெஸ்சியை தொடர்ந்து, அணிக்கான 4-வது கோலை சக வீரர் எரிக் லாமிலா 71-வது நிமிடத்தில் அடித்தார். மெஸ்சி இரண்டு கோல்கள் அடிப்பதற்கு உதவிகரமாக இருந்து முத்திரை பதித்தார். இதற்கிடையே வெனிசுலா வீரர் சாலமோன் ரோன்டன் (70-வது நிமிடம்) தலையால் முட்டி ஆறுதல் கோல் அடித்தார். முடிவில் அர்ஜென்டினா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை விரட்டி அரைஇறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு கால்இறுதியில் நடப்பு சாம்பியன் சிலி அணியின் சிலிர்ப்பில் மெக்சிகோ சின்னா பின்னமாக சிதறியது. விறுவிறுப்பான இந்த மோதலில் சிலி வீரர் எடுவர்டோ வார்கஸ் ‘ஹாட்ரிக்’ உள்பட 4 கோல்கள் (44, 52, 57, 74-வது நிமிடம்) அடித்து பிரமாதப்படுத்தினார். மேலும் எட்சன் புச் (16, 88-வது நிமிடம்), அலெக்சிஸ் சாஞ்செஸ் (49-வது நிமிடம்) ஆகியோரும் சிலி அணிக்கான கோல் பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டனர். மெக்சிகோ அணியால் கடைசி வரை கோல் தரிசனத்தை காண முடியவில்லை.

முடிவில் சிலி அணி 7-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை பந்தாடியது. பெரிய போட்டிகளில் மெக்சிகோவின் மோசமான தோல்வி இது தான். இதற்கு முன்பு 1978-ம் ஆண்டு உலக கோப்பையில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக 0-6 என்ற கோல் கணக்கில் தோற்றதே மெக்சிகோ அணியின் படுதோல்வியாக இருந்தது.

அவமானகரமான தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள மெக்சிகோ பயிற்சியாளர் ஜூவான் கார்லஸ் ஒசோரியா, மெக்சிகோ ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ‘‘இப்படியொரு மிகப்பெரிய தோல்வியை கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. அதே சமயம் சிலி அணிக்கும் மதிப்பு கொடுத்தாக வேண்டும். வலிமை வாய்ந்த சிலி அணி கோப்பையை மீண்டும் வெல்ல நல்ல வாய்ப்புள்ளது’’ என்று ஒசோரியா குறிப்பிட்டார்.

வருகிற 22-ந்தேதி நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் அர்ஜென்டினா-அமெரிக்கா (இந்திய நேரப்படி காலை 6.30 மணி). 23-ந்தேதி நடைபெறும் 2-வது அரைஇறுதியில் கொலம்பியா-சிலி (இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி 27-ந்தேதி நடக்கிறது.