சென்னையை உலுக்கிய இன்போசிஸ் பொறியாளர் சுவாதி கொலையில் குற்றவாளி புகைப்படம் வெளியீடு !

Jun 25, 16

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப் பகலில் இன்போசிஸ் பெண் ஊழயர் சுவாதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படுபவரின் புகைப்படத்தை ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர். குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தவர்கள் 1512 என்கிற எண்ணிற்கு தகவல் கொடுக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஒய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரின் மகள் சுவாதி (25), இவர் மகேந்திரா டெக் சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மறைமலைநகரில் உள்ள அலுவலகத்திற்கு செல்வதற்காக இன்று காலை 7.30 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர், கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், சுவாதியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படுபவரின் புகைப்படத்தை தற்போது ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர். கொலையாளியை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சுவாதியை படுகொலை செய்த குற்றவாளி அவரது செல்போனை பறித்துச் சென்றுள்ளதாகவும், குற்றவாளி வீசி எறிந்த அரிவாளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தவர்கள் 1512 என்கிற எண்ணிற்கு தகவல் கொடுக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்வாதியின் கொலை எதிரொலி காரணமாக மின்சார ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சுவாதி உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக இன்போஸிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக இன்போஸிஸ் கூறியுள்ளது.