8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்

Jan 29, 18

சென்னை பேராசிரியை உள்பட 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கல்யாண மன்னன் புருசோத்தமன் போலீசிடம் சிக்கினார்.

8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் சிக்கினார்

கோவை, 

சென்னை பேராசிரியை உள்பட 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கல்யாண மன்னன் புருசோத்தமன் போலீசிடம் சிக்கினார்.

கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 57). இவர், தன்னை தொழில் அதிபர் என்றும், மனைவி இறந்துவிட்டதால் 2-வதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கோவையில் உள்ள மெட்டிஒலி என்ற திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார்.

இதனையடுத்து திருமண தகவல் மையம் மூலமாக குமுதவள்ளி (45) என்பவரை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புருசோத்தமன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களில் புருசோத்தமன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி குமுதவள்ளியிடம் இருந்து ரூ.3 கோடி வாங்கிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த குமுதவள்ளி, புருசோத்தமன் குறித்து விசாரித்தார்.

அப்போது, புருசோத்தமன் சென்னை அண்ணாநகரை சேர்ந்த பேராசிரியை இந்திரா காந்தி, ஈரோட்டை சேர்ந்த சித்ரா உள்பட 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பலகோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு புருசோத்தமனின் மகள் கீதாஞ்சலியும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ய உடந்தையாக இருந்த திருமண தகவல் மைய நிர்வாகிகள் மோகனன் (65), வனஜாகுமாரி (53) ஆகியோரை சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த புருசோத்தமனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசாரின் தேடுதல் வேட்டையில் புருசோத்தமன் சிக்கினார். அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்யாண மன்னன் புருசோத்தமன் எத்தனை பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்? மோசடி செய்த பணம் எவ்வளவு? அந்த பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.